highcourt chennai

Advertisment

லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையில் தலையிட முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் 94 வருடங்களாகச் செயல்பட்டு வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு, கடந்த 17 -ஆம் தேதி முதல் வர்த்தகத் தடையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

மேலும், லக்ஷ்மி விலாஸ் வங்கியை, சிங்கப்பூரைத் தலைமையமாகக் கொண்டு செயல்படும் டி.பி.எஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த இணைப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.யு.எம்மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

Advertisment

அந்த வழக்கில், ‘வங்கிகள் இணைப்பு முறையான வங்கி ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நடைபெறவில்லை. விதிமீறல் நடைபெற்றுள்ளது. இதனால், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த இணைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும்.’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் எம். எஸ். ரமேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவாகும். இதில் தலையிட முடியாது.’ என்று மறுத்து விட்டனர். அதேவேளையில், லக்ஷ்மி விலாஸ் வங்கி பங்குதாரர்களின் நலனை, டி.பி.எஸ் வங்கிபாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 21 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.