HIGHCOURT CHENNAI

அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்த பிறகே, அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்ததில்,எந்த விதிமுறை மீறலும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக உயர் கல்வித்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில், கரோனா பரவலைத் தடுக்கஅறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர,பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்யக் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அரியர் தேர்வு ரத்து என்பது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது. அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பதில் மனுவில், ‘கரோனா பாதிப்பின் காரணமாக, மாணவர் சமுதாயம், எதிர்பாராத வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு மாணவர்கள் ஆளாகி உள்ளனர்.

Advertisment

முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டு விடுதிகள் காலி செய்யப்பட்டு, மாணவர்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள், விடுதிகளிலேயே தங்களுடைய புத்தகங்கள், நோட்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையும், பாடப் புத்தகங்களையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. பல கல்லூரிகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து என்பது, அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து, குழு அமைக்கப்பட்டு, அதன் முடிவில்தான், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் எந்த ஒரு விதிமுறை மீறலும் கிடையாது.

cnc

கரோனா ஊரடங்கு நேரத்தில், மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்குச் சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். திருப்தி அடையாத மாணவர்கள், வரும் தேர்வுகளை எழுதி, தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் இல்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது, ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளது. அதன் அடிப்படையில், பல்கலைக்கழகங்கள் சொந்தமாக தங்களது திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும். இது எந்த வகையிலும் மாணவரின் எதிர்காலத்தைப் பாதிக்காது. அரசின் இந்த உத்தரவு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது ஆகாது. மேலும், பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதால்தான், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அரியர் தேர்வை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.