Skip to main content

கரோனா பாதிப்பில் உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசுப் பணி கோரி வழக்கு! -நான்கு வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
highcourt

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியவர் தங்கலட்சுமி. கரோனா சிகிச்சைப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்ட அவர்,  கடந்த ஜூன் மாதம் கரோனா பாதித்து உயிரிழந்தார்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என,  தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏற்கனவே காப்பீட்டு நிறுவனம் மூலம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுவிட்டேன். சட்டம் படித்துவிட்டு,  வேலையில்லாமல்  இருக்கும் என்னுடைய இளைய மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி விண்ணப்பித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனு,  நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரரின்  கோரிக்கை,  அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில்  பரிசீலித்து முடிவு எடுக்க  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்