/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wdwe_54.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
"தமிழ்நாடு நீதித்துறை பணியில்,கடந்த 2011- ஆம் ஆண்டு,மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் சேர்ந்த பூர்ணிமா,தற்போது சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக இருந்து வருகிறார். விதிப்படி, இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, 12-ஆம் வகுப்பை முடிக்காமல் தொலைதூரக் கல்வி மூலம் பி.காம். படிப்பை முடித்து, அதன்பின்னர், எல்.எல்.பி. படிப்பை மைசூரு கல்லூரியில் படித்திருக்கிறார்.மேலும், வழக்கறிஞராக பூர்ணிமா பதிவு செய்யும்போது,தமிழ்நாடு பார் கவுன்சில் இதனை ஆராயத் தவறிவிட்டது. எனவே, தற்போது சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக பதவி வகிக்கும் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை ரெகுலர் முறையில் முடித்தற்கான ஆவணங்கள் இல்லை என்பதால், அப்பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும். எதனடிப்படையில் பணியில் நீடிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,10-ஆம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து பூர்ணிமா நீதித்துறை பணியில் சேர்ந்துள்ளார்.தமிழக அரசாணையின்படி,அவர் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை என வாதிட்டார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி சாஹி, பதிவுத்துறையிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களைச் சுட்டிக்காட்டி, விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமா, 1984-ல் 12-ஆம் வகுப்பை 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்து, அந்த சான்றிதழை காணொளியில் காட்டினர்.
இந்த வழக்கு மூலமாக, நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக, மனுதாரரான வழக்கறிஞர் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.அற்ப காரணங்களுக்காக வழக்குகள் தொடர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, மனுதாரருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்த அபராதத் தொகையை வசூலிக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டனர்.
மனுதாரர் சதீஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, அந்த வழக்கில் அக்டோபர் 20-ஆம் தேதி மனுதாரர் சதீஷ்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடியும் வரை, எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக ஆஜராகக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த மனு விசாரணைக்கு வரும் முன்பே, பூர்ணிமாவுக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கை செய்தியாக வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)