Advertisment

யானைகளுக்கு எமனாகும் ஹைவோல்ட் பாதுகாப்பு வேலி; மேற்குத் தொடர்ச்சியில் தொடரும் சோகம்...

High voltage electricity in the safety fence; Death of elephants in the hills

மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையின் வாழ்விடமாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். பன்னாரியை கடந்து சென்றால் திம்பம், ஆசனூர், தலமலை, தாளவாடி, அரேப்பாளையம், கேர்மாளம், கடம்பூர் மலைப் பகுதியுடன் பர்கூர், விளாங்கோம்பை என நீள்கிறது. அதே போல் பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமராட்டா, சிறுமுகை எனத் தொடர்கிறது.

Advertisment

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா என மூன்று மாநில வனப்பகுதியாக விரிந்துள்ள இங்கு, காட்டு யானைகள், புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, மான், காட்டுப் பன்றி, காட்டெருமை என வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. அடர்ந்த காடுகளையொட்டி மலை மக்கள் வசிக்கும் கிராமங்கள், அவர்கள் விவசாயம் செய்யும் விலை நிலங்களும் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் உண்டு. இதில் குறிப்பாகக் காட்டு யானைகள் தான் அதிக சேதத்தை உருவாக்கிவிட்டுச் சென்று விடுகிறது.

Advertisment

கரும்பு, சோளம், வாழை, நெல், குச்சிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவதால், தோட்டத்தைச் சுற்றி விவசாயிகள் பலர் வன விலங்குகள் ஊடுருவுவதைத் தடுக்க நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில், 23 ந் தேதி இரவு கொங்கர்பாளையத்தில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று புகுந்துள்ளது.

High voltage electricity in the safety fence; Death of elephants in the hills

அப்போது அங்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதே போல் பவானிசாகர் வனப்பகுதி யானகராச்சிகொரை என்னுமிடத்தில் ராஜன் என்பவருக்குச் சொந்தமான ஒன்றறை ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. இது வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால்,வன விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க, தோட்டத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார் ராஜன். இந்த நிலையில் 25 ந் தேதி இரவு அவரது தோட்டத்திற்கு அருகே ஆண் யானை ஒன்று வந்தது. பின்னர் ராஜன் தோட்டத்துக்குச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி அதுவும் மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டது.

இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டே நாளில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடையே பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகள் விவசாய தோட்டத்திற்குள் வராமல் இருக்கக் கம்பி வேலி அமைக்கலாம்; அதைத் தொட்டால் லேசாக ஷாக் அடிக்கும் அளவுக்கு மிகக் குறைவான அளவு மின்சாரம்தான் அதில் பாய்ச்சப்பட வேண்டும். ஆனால் குறைவான அளவு மின்சாரக் கம்பிகளை யானைகள் பிடுங்கி விடுகிறது என்பதால் கம்பியைத் தொட்டால் மின்சாரம் உடலில் பாயும் அளவுக்கு ஹைவோல்ட்டு மின்சாரம் பாய்ச்சுவதால், ஏதும் அறியாத அப்பாவி வன விலங்கான காட்டு யானைகள் நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்து விடுகின்றன.

யானைகள் விளை நிலங்களில் ஊடுருவாமல் தடுக்க சுற்றிலும் அகழி அமைத்தல் அல்லது அதுபோன்ற வேறு சிக்கனமான மாற்றுத் திட்டத்தை வனத்துறையினர் தான் செயல்படுத்த வேண்டும். ஆண்டொன்றிற்கு இது போல மின்சாரம் பாய்ந்தே முப்பது முதல் ஐம்பது யானைகள் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் பலியாகிறது என்கிறார்கள் வன ஊழியர்கள்.

wild elephant mountain Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe