High fee for corona treatment - Court orders Tamil Nadu government to explain

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.