
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 'பாரத் இந்து முன்னணி' என்ற அமைப்பை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று (13.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ‘மனுதாரர் கேட்கும் வழித்தடம் மிகவும் போக்குவரத்து நெருக்கடியான பகுதி. சென்னையினுடைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். எனவே திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்து ப்ரிவீவ் கவுன்சில் வரை சென்று முடிவு செய்து பிறகு மீண்டும் அந்த பிரச்சனை குறித்து எழுப்புவது சரியல்ல.
இஸ்லாமியர்கள் தங்களுடைய வேண்டுதலுக்காக ஆடு, கோழி ஆகியவற்றை படைத்து உண்ணும் வழக்கம் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மற்ற கோவில்களில் கூட ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது. காலம் காலமாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள மக்கள் மதவேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே தேவையற்ற கலவரங்களை உருவாக்கி ஒற்றுமையை சீர்குலைக்க விடக் கூடாது. யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்’ என தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘யாத்திரை நடத்த அனுமதி கேட்டுள்ள வழித்தடம் நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம். யாத்திரைக்கு வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு வலியுறுத்துகிறேன்’ எனக் கோரி , வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதாவது இந்த வழக்கில் இன்று (14.02.2025) தீர்ப்பை வாசித்த நீதிபதி இளந்திரையன், “திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு உள்ளது?. தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்கப் பார்க்கிறீர்கள். எனவே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகச் சென்னையில் பேரணி நடத்த அனுமதி கோரி, பாரத் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.