இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2013ஆம் ஆண்டு பெற்ற 30 கோடி ரூபாய்க் கடனை சகோதர நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டதில் 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு சி.பி.ஐ. சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இத்தகைய சூழலில் தான் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி என். ரவிச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், “சி.பி.ஐ. வழக்கை அடிப்படையாக வைத்துத்தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் ”எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு ரவிச்சந்திரன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பரத சக்கரவர்த்தி இன்று (07.07.2025) தீர்ப்பளித்தார். அதில், “என். ரவிச்சந்திரனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் 15 லட்சம் ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், 15 லட்சம் ரூபாய் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கும் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. அதோடு சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் மோசடி ஏதும் நடைபெறவில்லை. அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை” என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/07/kn-nehru-brother-kn-ravichandran-2025-07-07-17-18-10.jpg)