சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “தன் காதலனோடு இருந்த தனது அந்தரங்க வீடியோக்கள் இணையதளங்களில் பகிரப்பட்டுள்ளன. அதனை நீக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (15.07.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வாதிடுகையில், “இணையதளத்தில் வீடியோ இடம் பெற்றிருந்த அனைத்து இணையத்தளங்களையும் முடக்குவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், “39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருகிறது. எனவே இதனைத் தடுக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, “இந்த அந்தரங்க வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்குப் புகார் அளிக்க வேண்டும்?. புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. 

Advertisment

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காகச் சம்பந்தப்பட்ட வீடியோவை சம்பந்தப்பட்ட பெண் முன்னிலையிலேயே 7 காவல்துறையினர் பார்வையிட்டுள்ளார்கள். ஆண் காவலர்கள் பெண்ணை வைத்துக் கொண்டு இந்த வீடியோவை பார்க்கலாமா?. காவல்துறையினரின் இந்த செயல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வழக்குகளின் விசாரணையின் போது பெண் காவல் அதிகாரிகளைத் தான் பயன்படுத்த வேண்டும்” என காவல்துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.