“நீதிமன்றத்தை விளையாட்டு மேடையாக்க வேண்டாம்” - நா.த.க.வுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

madurai-high-court-our

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். 

இத்தகைய சூழலில் தான் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு கட்சியினரும் மடப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்றினை இன்று (07.07.2025) காலை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்த விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் நாளை (08.07.2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 

அதற்கு அனுமதி கோரி காவல்துறைக்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை இன்று மாலை விசாரிப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாம் தமிழர் கட்சியின் சார்பாகக் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டனர். இந்நிலையில் தொடர்ந்து நாளையும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு கடும் கோபம் அடைந்த நீதிபதி, “இந்த வழக்கில் இன்று காலை நீங்கள் எங்களுக்கு அனுமதி தரவில்லை என்று கூறியதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தின் நேரத்தை ஒதுக்கி இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை ஏன் மறைத்து இவ்வாறு நீதிமன்றத்தில் விளையாடி உள்ளீர்கள்?.  நீதிமன்றத்தை விளையாட்டு மேடையாக்க வேண்டாம். ஒவ்வொரு வாரமும் இந்த விவகாரத்தில் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்பீர்கள். உங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டுமா?” எனக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாளை  ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்காகத் தான் அனுமதி கோரினோம் எனத் தெரிவித்தார்.  இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒன்றும் அவசரமில்லை. கடந்த வாரம் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டீர்கள். எனவே காத்திருங்கள். நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர முடியாது. இது சம்பந்தமாகத் திருப்புவனம் காவல்துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து  இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளார். 

madurai high court Naam Tamilar Katchi ntk seeman thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe