The High Court sensational verdict for Nayakneri Panchayat President post issue

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. இந்த ஊராட்சியின் மன்றத் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துமதி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து இந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

Advertisment

இந்த மனுவில், “இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கிராம மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். 34 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தவர்கள் ஒருவர் கூட இந்த கிராமத்தில் இல்லை. இருப்பினும் இந்துமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் தான் இடஓதுக்கீடு பின்பற்ற வேண்டும் என விதி உள்ளது. இருப்பினும் இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை ”எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று (20.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி தேர்வு செய்யப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது. 4 வாரங்களில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண் அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.