நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (01.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மடப்புரம் இளைஞர் ஆஜித்குமார் மரணம் தொடர்பாகக் காவலர்கள் கைது செய்யப்பட்டது வெறும் கண்துடைப்பு தான் ஆகும். இந்த சம்பவத்தில் காவல் நிலையத்தில் எதுவுமே நடக்கவில்லை. ஆனால் காவல் நிலைய சிசிடிவி காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அனைத்தும் கோயிலில் நடந்துள்ளது. ஆனால் கோயில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் காண்பிக்கப்படவில்லை.
இந்த வழக்கை இப்படிக் கையாண்டால் குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்படுவார்கள். இந்த வழக்கை முறையாக ஏன் கையாளவில்லை?. இவ்வாறு இருந்தால் உரிய விசாரணை எப்படி நடைபெறும்?. இந்த சம்பவம் தொடர்பாக உரியச் சாட்சியங்களைச் சேகரிக்காமல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. என்ன செய்து கொண்டிருந்தார்?. சாட்சியங்களைச் சேகரிக்காத எஸ்.பி. மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை இவ்வாறு கையாண்டால் குற்றவாளிகள் எப்படித் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தில் முறையான விசாரணை எப்படி நடைபெறும்?. ஏன் வழக்கை முறையாகக் கையாளவில்லை?.
அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளதாக அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அஜித் குமார் கொடூரமாகக் கடுமையாக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகம் விடாமல் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது உடம்பில் 44 இடங்களில் காயங்கள் இருந்திருக்கிறது. அஜித் குமாரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது இறப்பு வரை எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.