High Court said that Dikshithas think they are above God

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோயிலில் உள்ள கனகசபையில் பொதுமக்கள் பல்லாண்டு காலமாக வழிபட்டு வந்ததைத் தடை செய்து வழிபட அனுமதி மறுத்தனர். இதனை மீறி கோவிலில் பணியாற்றும் நடராஜ தீட்சிதர் என்பவர் பட்டியல் சமூக பெண் ஒருவரை கனகசபையில் வழிபட அனுமதித்தார். இதற்கு கோயில் தீட்சிதர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து நடராஜன் தீட்சிதர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அவரை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோவிலில் இருந்து பணி நீக்கம் செய்தனர்.

இதனால் இவருக்கு கோவிலில் இருந்து கொடுக்க வேண்டிய எந்த பலனையும் கொடுப்பதில்லை. இதுகுறித்து அவர் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அவரது பணி நீக்கத்தை நீக்கி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தீட்சிதர் கோவில் தீட்சிதரைப் பணி நீக்கம் செய்த சம்பவத்தில் இந்து அறநிலையத்துறை தலையிடத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், “நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை சண்டைக்கு வருவது போல் கருதுகிறார்கள். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல. கோவிலில் உள்ள தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என நினைக்கிறார்கள். இது நல்லதல்ல.

Advertisment

நடராஜர் கோவில் தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும் இல்லையேல் திருநீறு கூட கிடைக்காது. மனக்கஷ்டங்களைப் போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர் “என நீதிபதி வேதனை தெரிவித்தார். மேலும் பக்தர்கள் வரும் வரை தான் கோவில்; இல்லாவிட்டால் கோவில் பாழாகிவிடும். எனவே இதுகுறித்து வரும் அக்டோபர் 21-ஆம் தேதி கடலூர் மாவட்ட இந்து அறநிலை துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கோயில் உள்ளே தீட்சிதர்கள் கிரிகெட் விளையாடியதை பக்தர் ஒருவர் வீடியோ எடுத்தபோது தீட்சிதர்கள் அவரை தாக்கி செல்பேனை பிடுங்கி கோயில் எங்களுக்கு சொந்தம் எனக்கூறியது. இதே நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கோயிலின் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தீட்சிதர்கள் விற்றுவிட்டார்கள் இவர்கள் சரியாக நிர்வாகம் செய்யவில்லை எனக் கடந்த 20 நாட்களுக்கு முன் விசாரணையின் போது தெரிவித்தது. இந்நிலையில் கோயில் தீட்சிதர்கள் குறித்து நீதிபதி கூறிய கருத்துக்கள் எனச் சிதம்பர நடராஜர் கோவிலைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து எழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.