The High Court rejected the Union Minister's request

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை செய்து வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

Advertisment

The High Court rejected the Union Minister's request

இதற்கிடையே திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஷோபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (10.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை சார்பில் வாதிடுகையில், “இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை வெள்ளிக்கிழமை (ஜூலை 18 ஆம் தேதி) வரை தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக இருந்தால். அதுவரை மனுதாரர் மீது எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதி, “மத்திய அமைச்சராக உள்ள பொறுப்புள்ள குடிமகனாக உள்ள ஒருவர், குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டுமல்லவா. எனவே இந்த வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது” எனக் கூறி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisment