/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-in_8.jpg)
இன்று துவங்க உள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து, தனித்தேர்வர்களுக்கான தேர்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
கரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுதேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி செப்டம்பர் 26 வரை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனித் தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி, திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனித் தேர்வராக எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுதாரர் சார்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா தொற்று காரணமாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படவில்லை.தனிமனித விலகலைப் பின்பற்றுவதும் முகக் கவசம் அணிவது, மாற்றுத்திறனாளி மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால், தனித் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு ப்ளீடர் முனுசாமி,‘நீதிமன்ற உத்தரவுப்படி, தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவருக்கும், அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில்போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அரசுதரப்பு வாதத்தை ஏற்று, இன்று நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்வை எதிர்கொண்ட விதம், தேர்வின் போது ஏதேனும் சிரமம் அவர்களுக்கு ஏற்பட்டதா என்ற அடிப்படையில், தமிழக அரசு மற்றும் மனுதாரர் என இரு தரப்பினரும் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)