தமிழ்நாடு அரசே மது அருந்துவதை ஊக்குவிக்கிறதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

High Court questioned whether the TN government promoting liquor consumption

டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களைச் சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், தற்போது பார் உரிமம் பெற்றவர்கள், பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பாணையைத்தடை செய்யக் கோரி ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

அவர்கள் அளித்த அந்த மனுக்களில், “ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், பார் உள்ள கட்டடத்தின் உரிமையாளருக்கும் தான் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த கட்டடத்துக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கையில், மூன்றாம் நபரான டெண்டரில் வெற்றி பெற்றவர்களுக்கு நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள டாஸ்மாக் கடையைக் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது. அதனால் பார் உரிமையாளர்களின் உரிமையைப் பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து உரிமத்தை நீட்டித்துத்தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், எட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்து அறிவிப்பாணைகளை ரத்து செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அன்று உத்தரவிட்டார். மேலும் அதில், புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளர்களிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுத்தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின் போது நீதிபதிகள்,“அனைத்து மாநில அரசுகளும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் சாசனச் சட்ட கொள்கை கூறுகின்றது. ஆனால், தமிழ்நாடு அரசே மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் விதமாகச் செயல்படுகிறதே” என்று கருத்து தெரிவித்தனர். அதன் பிறகு, இந்த வழக்கின் அனைத்துத்தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத்தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe