தேர்வு மையங்களை எப்படி அமைத்து தேர்வு நடத்தப் போகின்றீர்கள்? -பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

High Court question for school education!

சென்னையில் கரோனோ கட்டுப்பாட்டு பகுதிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு அனைத்து விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்படும் எனத் தமிழக பள்ளிக்கல்வித் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பான கோரிக்கையுடன் மாணவர்களின் பெற்றோர் சிலரும், இந்திய மாணவர் சங்கமும் பொது நல வழக்குகள் தொடர்ந்தன. அந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாக வாதிடப்பட்டது. கரோனா பாதிப்புக்குள்ளான கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறை நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அப்போது நீதிபதிகள், சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எப்படித் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்தப் போகிறீர்கள்? வெளியிலிருந்து அந்த மையங்களுக்கு எப்படி வர முடியும்? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப்பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை தரப்பு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டது.

இதையடுத்து, வழக்கு குறித்த பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

10th exam highcourt
இதையும் படியுங்கள்
Subscribe