/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 1_0_16.jpg)
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் 29- ஆம் தேதி அன்று திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டபோதும், கடந்த 10 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறி ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. எனவே, நீதிமன்றம் கண்காணிக்கும் வகையில் மீண்டும் மாநில காவல்துறையின் விசாரணைக்கே மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. தரப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மாநில அரசின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வழக்கு விசாரணை நடத்தும் வகையில் மூன்று அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் பெயர் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (09/02/2022) மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கு தொடர்பான உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தார். நீதிபதி உத்தரவில், ராமஜெயம் கொலை வழக்கை, கடந்த 10 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி.யும், சி.பி.ஐ.யும் மாறி மாறி விசாரணை மேற்கொண்டது. ஆனால், கொலைக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில், ஓரளவு விவரங்கள் இருந்தாலும், முழுமையான விவரங்கள் இல்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு மாற்றப்படுகிறது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சி.பி.ஐ. உடனடியாக வழங்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல் அக்தர் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையைக் கண்காணிப்பார். தூத்துக்குடி காவல்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான குழுவில், அரியலூர் காவல்துறை டி.எஸ்.பி. மதன், சென்னை சி.பி.ஐ.யைச் சேர்ந்த ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வழக்கு விசாரணை முடியும் வரை சி.பி.ஐ. அதிகாரி ரவியை வேறு பணியில் மாற்றக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை வரும் மார்ச் 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி 21- ஆம் தேதிக்குள் சிறப்புப் புலனாய்வுக்குழு தொடங்கினால் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
Follow Us