ADVERTISEMENT

நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

03:28 PM Jul 10, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வரும் 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வைத் தள்ளிவைக்கும்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான தேர்வில் 1,328 பேர் கலந்துகொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 33 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எழுத்து தேர்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, தகுதியானவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், 226 பேரை ஜூலை 19ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் சிலர், உரிய தகுதியைப் பெறவில்லை எனக் கூறி, விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், தேர்வு நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருதுவதால், இந்த தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனக் கூறி, ஜூலை 19ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முகத் தேர்வைத் தள்ளிவைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு முடியும்வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT