“சாதியைக் காரணம் காட்டி யாருக்கும் கோயில் நுழைவு மறுக்கக்கூடாது” - உயர் நீதிமன்றம் உத்தரவு!

ariyalur-temp

மாற்றுச்சமூகத்தைச் சார்ந்தவர்கள் பட்டியலின மக்களைக் கோயில் நுழைய அனுமதி மறுத்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலின மக்கள் கோயில் நுழைவும் அனுமதி வழங்கப்பட்டதோடு, அம்மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் இளையூர் கிழக்கு புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அய்யனார் கோவில். இந்த கோவிலில் 16க்கும் மேற்பட்ட பட்டியலின கிராம மக்களுக்குக் குலதெய்வமாகவும், 200 ஆண்டுகளாக வழிப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் இக்கோவிலுக்கு 8 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. அதில் விவசாயமும் செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆசிரியரான மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த சாமிக்கண்ணு என்பவர் இக்கோவிலைச் சீரமைத்து புதிய கோவிலாகக் கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி அப்பகுதி மக்களிடையே பணம் வசூல் செய்து கட்டி முடித்தவுடன் அக்கோவில் பட்டியல் இன மக்களை மட்டும் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயகொண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் ஆனந்தி அது மாற்றுச் சமூகத்திற்குச் சொந்தமானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதன்பிறகு அப்பகுதி மக்கள் எங்களின் குலதெய்வம் எப்படி அவர்களின் கோவிலாக இருக்க முடியும். அப்படி இருந்தாலும் எங்களையும் கோவிலில் அனுமதியுங்கள் என  2023ஆம் ஆண்டு மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து ஆதாரங்களையும் காட்டி முறையிட்டுள்ளனர். அதற்கும் எந்த பதிலும் இல்லாமல் காலம் கடந்துள்ளது. அதன் பிறகு அம்மக்கள் எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தை நாடியுள்ளனர். அதில் ஆணையம் இந்த இடம் அரசுக்குச் சொந்தமான இடம் எப்படி அவர்களுக்கும் மட்டும் சொந்தமாகும். அரசே எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆணையைப் பிறப்பித்தது. அதன்பிறகு வருகின்ற ஆடிமாதம் கோயில் திருவிழா என்பதால் மீண்டும் மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

அதற்கு நீங்கள் நீதிமன்றத்தை நாடுவதே சரியாக இருக்கும். எங்களால் ஒன்றும் செய்யமுடியாது எனக் கைவிரித்த காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு இன்று (17.07.2025) நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சாதியைக் காரணம் காட்டி யாருக்கும் கோயில் நுழைவு மறுக்கப்படக்கூடாது என்றும் கோயில் விழாவில் தனிநபர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நபர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் எந்தவொரு நபராக இருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில் இத்தகைய பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. கோவியில் நுழைவு அதிகார சட்டப்படி பிரிவு 3 கீழ் இந்துவாக உள்ள அனைவரும் பொதுக் கோவிலில் நுழையவும் வழிபடு செய்யவும் அனைத்து விதமான சடங்குகள் சம்பிராயங்கள் செய்யவும் உரிமை உண்டு. 

ariyalur-temp-1

அதனால் பட்டியலின மக்களைக் கோவியில் சென்று சாமி கும்பிட திருவிழாவில் கலந்துகொள்ளும் பட்டியலின மக்களைப் பாதுகாக்கும் வகையில்  மாவட்ட கண்காணிப்பாளரும், மற்றும் செயங்கொண்டான் காவல் ஆய்வாளரும் செயல்படவேண்டும் என உத்தரவிட்டார். இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் தீபிகா இந்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இன்னும் இச்சமூகத்தில் சமத்துவம் இல்லாமல் சமூக கட்டமைப்பு சீர்குலைந்து நிற்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சி. உரிமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு இறுதி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றங்களாகவே உள்ளது. இந்த  நிலையில் இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை மேலும் வலுவூட்டுகிறது” என்றார்.

anand venkatesh Ariyalur high court temple
இதையும் படியுங்கள்
Subscribe