High Court orders frequent government inspections in theaters!

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பெரம்பூரில் உள்ள பிரபல மாலில் உள்ள திரையரங்கில், வாட்டர் பாட்டில்கள், குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் அதிக பட்ச விற்பனை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகச் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அதில், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி தவறானது என்றும், இதன் மூலம் பல லட்ச ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக முறையாக விசாரணை செய்து உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும், அதில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாகப் புகார் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.