புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் நேரில் ஆஜராக விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

High Court orders dismissal of OPS and EPS appearing in person in Pugazhendi case

அதிமுகவிலிருந்துநீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கியதாக, ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கையில், இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. மற்றும்எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நாளை நேரில் ஆஜராக ஒ. பி.எஸ் - இ.பி.எஸ் க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத்தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியைக் கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்குக் கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் எனத் தெரிவித்தார். கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நீக்கப்பட்டது குறித்துத்தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத்தெரிவித்த அவர், இதில் அவதூறுக்கு என்ன முகாந்திரம் உள்ளதெனக் கேள்வி எழுப்பினார்

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன், புகாரில் அவதூறுக்கான எந்த சாரம்சமும் இல்லை எனவும், கட்சியின் விதிகளைப் பின்பற்றாத உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதெனத்தெரிவித்திருந்தார். கட்சியில் இருக்கும் ஒருவரைப் புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறாகுமா எனக் கேள்வி எழுப்பியிருந்த அவர், புகழேந்தியைக் கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல எனவும், கடந்த 2017 ல் ஏற்கனவே ஒரு முறை கட்சியில் இருந்து நீக்கிய போதும் இதே போன்ற வாரத்தைகளைப் பயன்படுத்தி தான் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தார்

இன்று புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும், பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒ.பி.எஸ் - இ.பி. எஸ் வெளியிட்ட அறிக்கையில், விடுவிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், நீக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இதில் அவதூறு வழக்குக்கு முகாந்திரம் உள்ளதாகவும் எடுத்துரைத்தார். இந்த அறிவிப்பால் தனது மானம், மரியாதை, கவுரவம் போய்விட்டதாகவும், சொந்த கட்சிக்காரர், மாற்றுக் கட்சியினர், உறவினர்கள் என யாரும் தன்னை மதிப்பதில்லை எனவும், தன்னை அசிங்கப் படுத்தியுள்ளதாகவும், தவறு செய்து விட்டீர்களா என மற்றவர் கேள்வி கேட்கும் நிலைக்குத்தள்ளப்பட்டதாகவும், இதில் அவதூறு உள்ளதா இல்லையா என்பதை கீழமை நீதிமன்ற விசாரணையில் தான் முடிவெடுக்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களைத்தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பைத்தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒ.பி.எஸ் - இ.பி.எஸ்.- க்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.

admk highcourt ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe