போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ். தர்மிஸ் அமர்வில் கடந்த 3ஆம் தேதி (03.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, இருவருடைய ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இத்தகைய சூழலில் தான் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “காவல்துறை தங்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கு அடிப்படை முகாந்திரம் இல்லாதது. தங்களுக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. எனவே ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த  ஜாமீன் மனுக்கள் நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் நேற்று (07.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்ற முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை” என வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா தரப்பில் வாதிடுகையில், “காவல்துறை அனுப்பிய சம்மனை ஏற்றுத் தான் இந்த வழக்கில் ஆஜராகி இருந்தேன். கைது செய்யப்பட்ட தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டதே தவிர. கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கவில்லை. மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை. போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்த ஒரு நிரூபணமும் செய்யவில்லை. எனவே இவருடைய கைது சட்ட விரோதமானது. இவரது கைதில் எந்த ஒரு சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “2 பேரும் எவ்வளவு போதைப்பொருட்கள் வாங்கினார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது காவல்துறை சார்பில், “கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் பழக்கம் குறித்துத் தெரியவருகிறது. அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் முதல் எதிரி பிரதீப் குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கடந்த 23ஆம் தேதியும், கிருஷ்ணா 26ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். எனவே 2 பேருக்குமே ஜாமீன் வழங்கக்கூடாது. இந்த வழக்கு சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் தரப்பில் வாதிடுகையில், “ஸ்ரீகாந்த் வீட்டில் அவருடைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது” எனத் தெரிவித்தார். இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (08.07.2025) வழங்குவதாக நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் 2 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் புழல் விசாரணை அதிகாரி முன்பு தினமும் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.