Skip to main content

“நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 17/05/2025 | Edited on 17/05/2025

 

High Court orders Banning the publication of NEET exam results

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 4ஆம் தேதி (04.05.2025) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் தேர்வர்கள் எழுதியிருந்தனர். அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்தனர்.

இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற்றது. மொத்தம் 180 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு அன்று கனமழையால் மாலை 03.00 மணி முதல் 4.15 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் முழுமையாகத் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூரைச் சேர்ந்த சாய் பிரியா, ஹரிஹரன் மற்றும் அக்‌ஷயா உள்ளிட்ட 13 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், “மின் தடை காரணமாக கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை. இதன் காரணமாகக் கூடுதல் நேரமும் தரவில்லை. இதனால் மருத்துவப்படிப்பு என்ற கனவு சிறு குறைபாடுகளால் பாதித்துவிடும் எனவே  மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்