/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/duraimurugan-art-dipr-3.jpg)
திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 97 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கடந்த 2002ஆம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் துரைமுருகனின் சகோதரர் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதன்படி இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கில் இருந்து கடந்த 2007ஆம் ஆண்டு அமைச்சர் துரைமுருகன் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் மறு சீராய்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி வேல்முருகன் அமர்வில் நடைபெற்று வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவிந்தரன், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை குறித்து வாதிட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்றுக்கொள்ளவில்லை. காவல் துறை கண்காணிப்பாளர் பதவிக்கு இணையான ஒருவர் விசாரிப்பதற்குப் பதில் காவல்துறை ஆய்வாளர் விசாரித்துள்ளார் எனவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி இன்று (23.04.025) வழங்கியுள்ள தீர்ப்பில், “லஞ்ச ஒழிப்புத்துறையின் மறு ஆய்வு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக விசாரித்து 6 மாதங்களில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)