“மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

judgement

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம்  மற்றும் மரியா கிளிட் அகியோர் அடங்கிய அமர்வில் இன்று (01.07.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது வெறும் கண் துடைப்பு தான்” எனத் தெரிவித்தனர். அதற்கு அரசு தரப்பில், “உயர் அதிகாரிகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருக்கிறது. எதை வைத்து அடித்தார்கள். அவரை எப்படி எல்லாம் காயப்படுத்தப்பட்டார்கள். அவருடைய அந்தரங்க உறுப்பிலும், முகத்திலும் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். கல்வி அறிவு உள்ள காலத்தில் போலீசார் இவ்வளவு தூரம் நடந்துகொள்வது பெரிய வியப்பாக உள்ளது. 

இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். காலம் காலம் செல்லச் சொல்ல நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Judge madurai madurai high court sivagangai
இதையும் படியுங்கள்
Subscribe