High Court order to kallakurichi incident report! 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (20.06.2024) வழக்கு தொடரப்பட்டது. அதிமுக சட்டத்துறை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இன்பதுரை இந்த வழக்கைத்தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

High Court order to kallakurichi incident report! 

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (21.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிடுகையில், “காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கள்ளச்சாராய விற்பனையத்தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?. கள்ளச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து அறிக்கை தர அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் நீதிபதி குமரேஷ் பாபு, “கள்ளச் சாராய மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை ஜூன் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisment