High Court order for Chidambaram Natarajar Temple Kanaக்a Sabai Issue 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணி திருமஞ்சன தரிசன விழா கடந்த ஜூலை மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமன் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், “ஆணி திருமஞ்சன திருவிழாவின் போது பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர். எனவே இந்த தடையை நீக்கி பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அப்போது இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம், “கனக சபையில் ஏறி வழிபடப் பக்தர்களுக்குத் தடையில்லை” என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (20.08.2024) இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கிட்டு, “கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் விழாக்காலங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்யத் தீட்சிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதைத் தடுக்கக் கூடாது” என உத்தரவிட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.