Advertisment

நிதியை ஒதுக்காத மத்திய அரசு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

High Court order for Central govt not allocating funds issue

கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி கோவை சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (10.06.2025) விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் வாதிடுகையில், “கல்வி உரிமைச் சட்டத்தில் 25% இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60% தொகையை மத்திய அரசும், 40% தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கடந்த 2021ஆம் கல்வி ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு கல்வி ஆண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதற்குண்டான 100% தொகையையும் மாநில அரசு தான் வழங்கியது. மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க 28ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Advertisment

இதனையடுத்து நீதிபதிகள், “தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்காததால் தனியார்ப் பள்ளிகள் பாதிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டனர். அப்போது, “இதே போல மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை? என நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும்” என ரவீந்திரன் வாதத்தை முன் வைத்தார். அதே சமயம், “என்ன காரணத்திற்காக நீதி ஒதுக்கப்படவில்லை?” என நீதிபதி கேட்டனர். அதற்குத் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், “மத்தியில் ஆளும் கட்சிக்குத் தமிழகத்தில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் தான் நிதி ஒதுக்கவில்லை” என்ற கருத்தைத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த நிதியைத் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தொகையை முழுமையாக உடனடியாக சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும். மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கான தொகைக்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தனர்.

funds high court right to education tn govt union govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe