High Court order by the Tamil Nadu Bar Council 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20.11.2024) வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியிலும், நீதித்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் போராட்டம் நடத்தி இருந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உடனடியாக தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது பார் கவுன்சில் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிடுகையில், “தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான கொலை சம்பவங்கள், கொலை முயற்சி போன்றவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தவறு செய்யக் கூடிய வழக்கறிஞர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது பார் கவுன்சில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

Advertisment

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த சம்பவம் கைது நடவடிக்கை தொடங்கி விட்டதா?. எந்த மாதிரியான நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது?’ எனக் கேள்வி எழுப்பினர் அதோடு, “வழக்கறிஞர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு நபரும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். இருப்பினும் இனிவரும் காலங்களில் வழக்கறிஞர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களில் நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதும் காவல்துறை பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் மாநில காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளர் உடன் ஆலோசனை நடத்தி பரிந்துரையைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து. இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதம் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.