High Court Madurai branch issue order for Tiruchendur temple temple function issue

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி (07.07.2025) காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள பாரம்பரிய காந்திரீக முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. எனவே கேரள முறைப்படி அங்குள்ள வல்லுநர் குழு கொண்டு தற்பொழுது நடைபெறும் திருப்பணி முறைப்படி நடைபெற்றுள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அங்கு 24 தீர்த்தங்கள் உள்ளது. அதைப் புதுப்பிக்க வேண்டும். மேலும் குடமுழுக்கின் போது ஹெலிகாப்டரில் மலர்கள் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சூழல் ஆகமத்துக்கு எதிரானது. அதாவது குடமுழுக்கு நிறைவடைந்தது என்பதற்காகப் பணி நடைபெறும் பொழுது கருடன் வானத்தில் வட்டமிடும்.

Advertisment

அச்சமயத்தில் ஹெலிகாப்டரை பயன்படுத்தினால் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது. இது பக்தர்கள் மனதைப் பாதிக்கும். எனவே கேரள முறைப்படி திருப்பணிகள் நடைபெற்றுள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும். எனவே அதுவரையில் குடமுழுக்கு நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளிட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (18.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து. நீதிபதிகள், “கோவிலில் ஏற்கனவே அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

எனவே கோயில் குடமுழுக்குக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. எனவே இந்த மனுத் தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவுவதற்கும் மற்றும் புனித நீரைத் தெளிப்பதற்கும் தடை விதிக்க முடியாது. அதே சமயம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி உள்ளதா?, கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்ளதா? அல்லது வந்து அங்கு வரும் பக்தர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு புகார் எழுந்துள்ளது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.