/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/povai-jegan-hc-art_0.jpg)
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், “இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும், பூவை ஜெகன்மூர்த்தியும் பிற்பகல் 02:30 மணி அளவில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அப்போது பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகுவதற்குக் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை எற்றுகொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையைச் சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்தார். இதனையடுத்து பூவை ஜெகன்மூர்த்தியும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும் வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது பூவை ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதில் கூலிப்படையினரைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு என்பது தவறானது. அதே போன்று ஏ.டி.ஜி.பி. ஜெயராமனுக்கும் வழக்கில் தொடர்பில்லை” என வாதிடப்பட்டது.
இதனையடுத்து காவல்துறை தரப்பில் வாதிடுகையில், “இந்த விவாகரத்தில் கூட்டுச் சதி உள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே வாத பிரதிவாதங்கள், கடத்தப்பட்ட சிறுவனுடைய வாக்கு மூலம், சிறுவனைக் கடத்தியது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகள், சிறுவனை அருகில் உள்ள உள்ள ஹோட்டலில் அழைத்துச் சென்றது என அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி பெயர் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்குச் சென்ற போது அவரை விசாரிக்க விடாமல் அவருடைய ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, “நீங்கள் எந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆகி இருக்கின்றார்கள்?. உங்களுக்கு எத்தனை பேர் வாக்களித்தார்கள்?. வாக்களித்த மக்கள் உங்களைக் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காகவா எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்?” என அடுக்கடுக்காக சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “நீதிமன்றம் நினைத்திருந்தால் 10 நிமிடங்களில் உங்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மதிப்பளித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தனியாகத்தான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். எனவே அவர் காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீதிமன்றம் நினைத்திருந்தால் அவரை உடனடியாக கைது செய்திருக்க முடியும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adgp-jeyaraman-art_0.jpg)
200, 300 பேர் வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என்ற எண்ணம் தவறானது . இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த விவகாரத்தில் கூட்டமாகக் கூடினால் தான் பயந்துவிட மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று தொடர்ச்சியாக அத்துமீறினால் நீதிமன்றம் அதனுடைய உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை முழுமையாகத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முழுமையாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
காவல் துறையை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு அவர் தனியாக விசாரணைக்கு ஆஜராகவேண்டும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பரபரப்பான சூழலில் ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)