High Court judge opinion The police should act as a neutral body

மதுரை மாவட்டம் பாண்டி கோயில் என்ற இடத்தில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டுத் திடலில் ஜூன் 10ஆம் தேதி முதல் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22ஆம் தேதி வரை காலை, மாலை என வழிபாடு நடத்தி பிரசாதம் வழங்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மாநாட்டுத் திடலில் ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து 22ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தினசரி 2 மணி நேரம் பூஜை செய்ய அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குக் காவல் துறை தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆகவே அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22ஆம் தேதி வரை காலை மாலை வழிபாடு செய்து பிரசாதம் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிடவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று (06.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அரசபாண்டி என்பவர் வாதிடுகையில், “இந்து முன்னணி அமைப்பு சார்பாக ஏற்கனவே அனுமதி கோரி அளித்த மனு தொடர்பாக நேற்று (05.06.2025) 36 கேள்விகள் காவல்துறை தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் அதற்குப் பதிலளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி புகழேந்தி, “அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிப்பட ஆகம விதிகள் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில், “ஆகம விதிகளின் படியே அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையும் மாலையும் 2 மணி நேரம் பூஜை நடத்தி பிரசாதம் மட்டுமே வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு தரப்பில் வாதிடுகையில், “தொடர்ச்சியாக 12 நாட்கள் பூஜை மற்றும் தரிசனத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். தினமும் 200 முதல் 300 நபர்கள் அப்பகுதியில் கூடுவதற்கான வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி புகழேந்தி, “இதே முறையிலேயே பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடும் நடைபெற்றது. அங்கு இது போல் அனுமதிக்கப்பட்ட நிலையில் இங்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை?. காவல்துறையினர் நடுநிலையான அமைப்பாகச் செயல்பட வேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு” எனத் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக உதவி காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.