High Court issues order H. Raja must appear for questioning for thiruparankundram

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி கடந்த பிப்ரவரி போராட்டம் நடத்த உள்ளதாக இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில், மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்ததன் பேரில், பா.ஜ.க உள்பட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மத மோதலை உருவாக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியது உட்பட 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு எச்.ராஜாவுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸை எதிர்த்து எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (23-06-25) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நோட்டீஸை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவர், ‘நோட்டீஸை எதிர்த்து எச்.ராஜா வழக்கு தொடர அதிகாரம் இல்லை. எனவே, அவர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.