பால் விநியோக டெண்டர் காலம் முடிவதற்கு முன்பே ஒப்பந்தம் ரத்து! -கூட்டுறவு சங்கம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

பால் விநியோகம் செய்வதற்கான டெண்டர் காலம் முடியும் முன்னர் ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court- Interim injunction ordered by Co-operative Society

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இருந்து பெறப்படும் பாலை, நாடு முழுவதும் மொத்தமாக விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏதுவாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், இந்திய தேசிய பால் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் இணையதளத்தில் இ டெண்டர் வெளியிட்டது. கடந்த 12-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த டெண்டரில் ஆற்காடு பால் விநியோகஸ்தர்கள் நிறுவனம் திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த ஒப்பந்தம், நடப்பாண்டு நவம்பர் 15 முதல் நவம்பர் 29-ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து விதிகளையும் பின்பற்றி ஆற்காடு பால் விநியோகஸ்தர்கள் பாலை வழங்கி வந்த நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி முதல் பால் கொள்முதலுக்கான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தரப்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வாறு ஒப்பந்தத்திற்கான காலம் முடியும் முன்பே ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும், இந்த ஒப்பந்தத்தைப் பெற 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்ட நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆற்காடு பால் விநியோகஸ்தர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ரேவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு நவம்பர் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

highcourt milk
இதையும் படியுங்கள்
Subscribe