
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை ஆறு வாரங்களுக்கு நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், சுற்றுச்சூழல் சார்ந்த இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர் அமைப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 112 கோடி ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ள ஓடையில் காங்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு தடை கோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமான பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓடையில் பூங்கா உள்ளிட்ட கட்டுமானங்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்படுவதாகவும், அழகுபடுத்தும் பெயரில் ஓடை சிதைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்கொள்ளும் இத்திட்டத்தை எட்டு பாகங்களாக பிரித்து டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புக்கு மேல் பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெருந்தொகை சம்பந்தப்பட்ட இத்திட்டத்தை மேற்கொள்ள முடியவில்லை என்பதால் தடையை நீக்க வேண்டும் எனக் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈரோடு பெரும்பள்ள ஓடை அழகுபடுத்தும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுபறிக்கை பெறவில்லை எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், இந்த விவகாரம் தொடர்பாக தேசியப்பசுமைத் தீர்ப்பாயத்தை அணுக மனுதாரர் அமைப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
மேலும், பெரும்பள்ள ஓடையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை ஆறு வாரங்களுக்கு நீட்டித்த நீதிபதிகள், இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.