High Court directs Egmore Magistrate to file Rowdy Shankar autopsy report

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்ய எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி இளநீர் சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவரை பிடிக்கச் சென்ற காவலர்களைத் தாக்கியதால், ரவுடி சங்கர் கடந்த 21 -ஆம் தேதி என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

Advertisment

ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய மகனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டுமென, அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர், தேசிய மனித உரிமை ஆணைய வழிமுறைப்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூராய்வு செய்தது. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் உடலை வாங்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மறுநாள் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

உடற்கூராய்வு செய்யப்பட்ட வீடியோ பதிவு மாஜிஸ்திரேட் வசம் உள்ளது. மறு பிரேதப் பரிசோதனைக்கான அவசியம் இல்லை. அதுபோல, அயனாவரம் காவல் நிலைய வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 25 -ஆம் தேதி முதல் விசாரணை செய்துவருகின்றனர். ஆனால், பிரேதப் பரிசோதனையின் போது சங்கரின் குடும்பத்தார் உடன் இல்லாததால், மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிட்டனர்.

Ad

இதையடுத்து, உடற்கூராய்வு தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சி.பி.சி.ஐ.டி போலீசாரை இணைத்து, அவர்களை வரும் 4 -ஆம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.