
பொதுமக்கள் நலன் கருதி, தொற்று பரவல் தணியும்வரை விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே விமானப் பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலை தணிந்துவரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கரோனா தொற்று பரவல் தணியும்வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது நலனைக் கருதி கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.