/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/appavu-art_6.jpg)
சென்னையில் கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணையத் தயாராக இருந்தனர். அதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார்’ எனத் தெரிவித்திருந்தார். இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ. களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (17.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை” என்றார். அதற்கு பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால், கட்சி சார்பில் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்குக் கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art_64.jpg)
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அரசியல் கட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தால் தலைவரோ, பொதுச்செயலாளரோ தான் தாக்கல் செய்ய முடியும்” எனச் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “அவதூறு வழக்கைத் தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்களில் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை. கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கற்பனையாகக் கூறக்கூடாது” என பாபுமுருகவேல் தரப்புக்கு அறிவுறுத்தினார்.
மேலும், “அ.தி.மு.க. ஆட்சி தனது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்தது. அச்சமயத்தில் எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அ.தி.மு.க.வின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது? எனக் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுக்கு, “நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு கீழமை நீதிமன்றத்தில் அப்பாவு மனுத்தாக்கல் செய்து விலக்கு பெற்றுக்கொள்ள முடியும்” என நீதிபதி தெரிவித்தார். அதோடு இந்த மனுவுக்கு அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)