Advertisment

இந்த ஆண்டுக்கான பள்ளிக் கல்வி கட்டணத்தை அறிவித்தது உயர்நீதிமன்றம்..!

High Court announces school tuition fees for this year ..!

Advertisment

தனியார் பள்ளிகள் 85 சதவீதம் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் கட்டணம் செலுத்தவில்லை அல்லது தாமதமாக செலுத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40 மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தமிழக அரசு தரப்பில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ம் கல்வியாண்டிலும், 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநில பள்ளிகள் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் எனவும், கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தனியார் பள்ளிகள் 2019-20ல் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 85 சதவீதத்தை வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்திலும் வருமானம் இழக்காத துறைகளில் பணியாற்றும் பெற்றோர்களிடமிருந்து 85 சதவிதம் வரை வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். வருமானத்தில் இழப்பு ஏற்பட்ட பெற்றோர்களிடமிருந்து 75 சதவீதத்தை வசூலிக்கவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் இந்த தொகையை 6 தவணைகளாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 1அம் தேதிக்குள் செலுத்தலாம் எனவும் கால அவகாசம் வழங்கியுள்ளார்.

கரோனா தாக்கத்தால் வேலை இழப்பு, தொழில் முடக்கம் போன்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர், கட்டணத்தில் சலுகை கோரி அந்தந்த பள்ளிகளை நாடும்படியும், அதில் பள்ளிகள் முடிவெடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

2020-21ஆம் கல்வியாண்டில் நிலுவை கட்டணம் இருந்தால் அதை பள்ளிகள் வசூலித்துக்கொள்ளவும் அனுமதித்துள்ளார். எந்த ஒரு மாணவரும் கட்டணம் செலுத்தவில்லை அல்லது தாமதம் என்ற காரணத்திற்கான அவர்களுக்கு வழங்கப்படும் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகளில் பங்கேற்பதில் தடை ஏதுமிருக்கக் கூடாது எனவும் பள்ளிகளுக்கு அறிவுறித்தி உள்ளார். அதுதொடர்பான புகார்களை தீவிரமாக கருதி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை அனுகினால் அவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளர்.

கட்டண சலுகையில் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் பிரச்சனை எழுந்தால் மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளிக்கவும், அதை 30 நாட்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுடைய கட்டண விவரங்களை இணையதளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என நீதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை 8 வாரங்களில் நிரப்ப வேண்டும் எனவும், 85 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதித்து திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை தமிழக அரசு 2 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

highcourt private school fee private school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe