மதுபோதையில் காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களிடம் தகராறு செய்வது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ் அப்புகளில் பரவியது. இந்த வீடியோவில் தகராறு செய்பவர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்றுசிலர் பரப்பியுள்ளனர்.

police

போலீசாருடன் தகராறு செய்த நவீன்

Advertisment

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, சென்னை திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார் ஆட்டோ ஒன்றை மோதிவிட்டு நிற்காமல் சென்றதுடன், சாலையோர இளநீர் கடைக்குள் புகுந்து சுவற்றில் மோதி நின்றது. கார் மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் காயத்துடன் தப்பினார்.

Advertisment

police

பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் கட்டு போட்டுள்ள நவீன்

இந்த சம்பவம் குறித்து அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரிக்க முயன்றபோது, அந்த நபர் போலீசார்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். போலீசாரையும் தாக்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ் அப்புகளில் பரவியது.

அந்த நபரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இதில் அவர் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நவீன் என்றும், அவர் பழ வியாபாரி என்றும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் அடையாறு காவல்துறையினருக்கு தகவல் அளித்து அவர்களிடம் நவீனை ஒப்படைத்துள்ளனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுகவினர் கூறும்போது, போலீசாரை தகாத வார்த்தையில் திட்டி அவர்களிடம் தகராறு செய்தவர், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் இல்லை. சி.வி.சண்முகத்திற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சி.வி.சண்முகத்தின் மகன் ஜெயசிம்மன் தற்போது ப்ளஸ்டூ தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருக்கிறார். அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிடுவது கண்டனத்திற்குறியது என்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து, தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறுகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் சொல்லி புகார் கொடுத்துள்ளார்.