ADVERTISEMENT

ஹீமோபிலியா மரபணுவால் ஏற்படும் நோய் - மருத்துவமனை முதல்வர்  வனிதா பேச்சு

05:08 PM Apr 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக ஹீமோபிலியா தினம்-ஏப்ரல் 17' 2022 முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று (18.4.2022) நடைபெற்ற உலக ஹீமோபிலியா தின நிகழ்ச்சியில் தலைமை ஏற்று மருத்துவமனை முதல்வர் வனிதா பேசியதாவது; “ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக ஹீமோபிலியா தின கருப்பொருள் "அனைவருக்கும் அணுகல்" என்பதாகும். ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோய். இக்குறைபாடு உள்ளவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் மற்றவர்களைவிட ஒப்பிடும்போது ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும். அதற்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனில் அதிக இரத்த போக்கின் விளைவாக மரணத்திற்கு வழிவகுக்கிறது.

வாயில் ஏற்படும் இரத்தப்போக்கு, சிறிய கீறலிலிருந்து அதிக இரத்தம் வெளியேறுதல், மூக்கில் ஏற்படும் இரத்தக்கசிவு ஆகிய வெளிப்புற இரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் மற்றும் மலத்துடன் இரத்தம் வருதல், உடலில் உள்ள பெரிய தசைகளில் ஏற்பட்டிருக்கும் பெரிய சிராய்ப்பில் இரத்தக்கசிவு ஏற்படுதல், காயங்கள் ஏதுமில்லாத போதிலும் மூட்டுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு, தலையில் ஏற்பட்ட சிறிய புடைப்பின் பிறகு மூளையில் இரத்தம் கசிதல் அல்லது அதிதீவிரமான காயத்தினால் ஏற்படும் இரத்தக்கசிவு உள்ளிட்ட உட்புற ரத்தப்போக்கு ஹீமோபிலியா நோயில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரத்தம் உறைய தேவையான காரணிகள் குறைபாடே ஹீமோபிலியா நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கிறது. ஹீமோபிலியவால் ஆண்களே பாதிக்கப்படுகின்றனர். இரண்டு வகையான ஹீமோபிலியாகள் உள்ளன. ரத்தத்தில் காரணி Vlll குறைபாட்டால் ஹீமோபிலியா ஏ உருவாகிறது. சுமார் ஐந்தில்-நான்கு பங்கு இந்த வகையை சார்ந்தவை ஆகும். ஹீமோபிலியா பி வகை ரத்தத்தில் காரணி IX குறைபாட்டால் உருவாகிறது.

மரபணு ஆலோசனையை தொடர்ந்து மரபணு சோதனை செய்வதன் மூலம் ஹீமோபிலியா கண்டறியப்படுகிறது. மரபணு குறைபாடு காரணமாக இருப்பதால் ஹீமோபோலியோவை குணப்படுத்த முடியாது. தீவிர ஹீமோபிலியா ஏ மற்றும் பி உள்ள நபர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கப்படுதல் அவசியம். ஹீமோபிலியா நோயாளிகளில் ஏற்படும் இரத்தக்கசிவுகளுக்கு காரணி VIIl அல்லது காரணி IX செலுத்தும் சிகிச்சை தேவைப்படுகிறது.

ஹீமோபிலியா நோயாளிகள் காயம் ஏற்பட்டால் அழுத்தம் கொடுத்து, உயர்த்திப் பிடித்து, ஐஸ் கட்டி வைத்து ஓய்வு எடுக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும். நீச்சல், நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், இறகுப்பந்து விளையாடுதல் ஆகியவற்றை ஹீமோபிலியா நோயாளிகள் மேற்கொள்ளலாம். விளையாடும்போது தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். ஹீமோபிலிய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். தலைவலி ஏற்பட்டால் சாதாரணமாக எண்ணி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயிறு வலி மற்றும் சிறுநீரில் ரத்தம் வந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். கூர்மையான முனைகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இதுவரையிலும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 90 ஹீமோபிலியா நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 48 குழந்தைகள் ஹீமோபிலியா நோய்க்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி சிகிச்சை மையம் விரைவில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு செலுத்தப்பட்டது. ஹீமோபிலியா நோயாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் ஹீமோபிலியா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து செவிலிய மாணவிகளுக்கான ஹீமோபிலியா குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண் ராஜ், துணை முதல்வர் மருத்துவர் அர்ஷியா பேகம், நிலைய மருத்துவ அலுவலர் சித்ரா திருவள்ளுவன், குழந்தைகள் நலத்துறை தலைவர் சிராஜூதீன் நசீர், மருத்துவத் துறை தலைவர் பத்மநாபன், குழந்தைகள் நல துறை பேராசிரியர் மைதிலி, ஹீமோபிலியா சிகிச்சைப் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் விஜய தேவன், ஜோசப் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT