/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hemanth-art.jpg)
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் சுமார் 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-art-flag-ind_9.jpg)
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப்பதிவில், “ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலின் அப்பட்டமான காட்சி ஆகும். புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது என்பது அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. பாஜக அரசின் விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது வெளிக்காட்டுகிறது. இது போன்ற பாஜகவின் தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. ஹேமந்த் சோரன் இன்னல்களை எதிர்கொண்டாலும் அவரது மன உறுதி பாராட்டுக்குரியது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு ஒரு உத்வேகம் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)