
கனமழையின் காரணமாக, பேரணாம்பட்டில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கனமழையின் காரணமாக, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50,000- யும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.