Heavy rains in Madurai Rainwater entered the houses

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

மேலும், கனமழை தொடர்பாக மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 03.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 08.30 - மாலை 05.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்கப் போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று (24.10.2024) இரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான இரு விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டன. அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தன. அதன்பின்னர் பாதுகாப்பாக இருவிமானங்களும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டன. நேற்று முன்தினம் (23.10.2024) மதுரை மாவட்ட பந்தல்குடி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் குப்பைகளை அகற்ற உள்ளே இறங்கியவர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.