
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், நாளை (18.11.2021) சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் மூன்று மாவட்டங்கள் என மொத்தம் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
நாளை 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் நான்கு மாவட்டங்களுக்கும் நாளை 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், திருமூர்த்தி பகுதியில் -13 சென்டி மீட்டர் மழையும், நாமக்கல் மங்களபுரத்தில் - 11 சென்டி மீட்டர் மழையும், கெங்கவள்ளியில் - 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.