
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. ஏற்கனவே நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட நிலையில் மே 29, 30 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (28/05/2025) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, குமரி, நெல்லை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பல இடங்களில் பரவலாக மிதமான மழை பொழிந்துள்ளது. வீரப்பன் சித்திரம், சூளை, திண்டல், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.