
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இன்று (18.11.2021) டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்தது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' விடப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடலூரில் மழை காரணமாக தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று இன்று காலை கனமழை காரணமாக இடிந்தது. இந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டடமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மழையால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.