heavy rain; Postponement of University Examinations

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ மழையும், கொளத்தூரில் 15 செ.மீ மழையும், திருவிக நகரில் 15.4 செ.மீ மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. பொன்னேரியில் 14 செ.மீ, சோழவரத்தில் 13 செ.மீ, செங்குன்றத்தில் 12 செ.மீ, பூந்தமல்லியில் 9 செ.மீ, திருவள்ளூர் மற்றும் ஜமீன் கொரட்டூரில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (30.11.2023) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.