Skip to main content

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (03.12.2019) விடுமுறை!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. 


இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03.12.2019) விடுமுறை என்று ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழை காரணமாக கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

heavy rain most of districts schools holiday announced

அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 9 செ.மீ, ராமேஸ்வரம், வட்டானத்தில் தலா 8 செ.மீ, தேவிபட்டினத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.